ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....
கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம்
சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன் பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆம்பலாப்பட்டு அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலைக்கு தெற்கில் அமைந்துள்ளதால் இது தென்திருவண்ணாமலை என வழங்கப்பெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொள்பவர்கள் அங்கு செல்லமுடியாத பட்சத்தில் இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
நான் மாடக்கூடல் என அழைக்கப்படும் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திகாட்டிய சிவபெருமான் பாண்டிய மன்னன் மூலம் ஆம்பலாப்பட்டில் சிவாலயம் கட்ட வேண்டும் என திருஉள்ளத்தில் நினைத்தார் போலும் அதற்கான தருணம் கூன்பாண்டியன் வாயிலாக அமைந்தது. “மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூண்பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்குதீங்குகள் செய்து வந்தான், இதைக்கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவநெறி தழைத்தோங்கு விரும்பி திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைக்க திட்டமிட்டார். திருஞானசம்பந்தர் வேதாரண்யத்தில் இருப்பதை அறிந்து அங்கு ஆட்களை அனுப்பி அவரை மதுரைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தரும் சிவனடியார்களும் புடைசூழ மதுரை வந்தார். பின்னர் அவர் சொக்கநாதர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார்”. இதைகண்ட சமணர்கள் ஆத்திரமடைந்து பாண்டிய மன்னரிடம் சென்று செய்தியை தெரிவித்தனர். உடனே கூன்பாண்டியன் இவர்களை மதுரையில் இருந்து வெளியேறும்படி உத்திரவிட்டான். சமணர்களும் அன்று இரவே திருஞானசம்பந்தர் தங்கி இருந்த மடத்துக்கு தீவைத்தனர். ஆனால் இந்த நெருப்பு சிவனடியார்களை ஒன்றும் செய்யவில்லை.
திருஞானசம்மந்தரோ “இந்த தீ பையவே சென்று பாண்டியருக்கு ஆகவே” என்று பாடினார். சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று அவனுக்கு வெப்ப நோயை உண்டாக்கியது. அந்த நோயை பலரும் போக்கிட முயற்சி செய்தனர் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக்கொண்டே சென்றது. அதனால் நோயின் கொடுமை தாங்காது சபையோர் மன்னனிடம் சென்று திருஞானசம்பந்தருக்கு தீங்கு செய்ய நினைத்தால் தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு அழைத்தால் நோய் குணமாகும் என்றனர். அதற்கு மன்னன் இசைவு தர மங்கையர்கரசியின் வேண்டுகோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். “மந்திரமாவது நீறு” என்ற திருநீற்று பதிகத்தை பாடி மன்னனின் நெற்றியில் தன் திருகரத்தால் திருநீற்றை பூசினார். அவரது வெப்ப நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னரிடம் அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்னியாய் தகித்த வெப்ப நோய் நீங்கியது எனவே பஞ்ச பூதங்களின் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும் என்றார். அதன் பேரில் கூன்பாண்டியன் மங்கையர்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.
கனவில் தெரிந்த காட்சி:
தஞ்சை மாவட்டம் ஆம்பலாபட்டு கிராமத்தை அடைந்த போது அந்தி சாய்ந்து விட்டதால் அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது கனவில் தோன்றிய ஈசன் எனக்கு இங்கேயே கோவில் கட்டு என்றார். அதன்படியே அங்கே மன்னன் கோவில் கட்டினான். அதற்கு அண்ணாமலையார் திருநாமத்தை சூட்டினார் என்கிறது தலபுராணம்.
வழுவா வண்ணம்அறுமே – திருஞானசம்பந்தர்
அடி, முதல் காண பூமிக்குள் பன்றி உருவில் தேடிய விஷ்ணுவுக்கும், தலைமுடியை விண்ணில் கண்டுவிட பருந்து வடிவில் பிரம்மனுக்கும் ஆதி அந்தம் இல்லாத அருட்பெருஞ்ஜோதிவடிவாக சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்தார். இதனால் அண்ணாமலையார் என அழைக்கப்பட்டார். சிவபெருமான் ஜோதி வடிவான காட்சி கொடுத்ததும் தேவிக்கு இடப்பாகம் கோடுத்து அருளியதும் திருகார்த்திகை திருநாளில்தான். இதனால் தான் சிவாலயங்களில் சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூறும் விதத்தில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
கூன்பாண்டியன் கட்டிய தென்திருவண்ணாமலையார் கோவில் காலப்போக்கில் பராமரிப்பின்றி கோவிலுக்கு முன்னோர்கள் தானம் வழங்கிய நிலத்திலிருந்து கிட்டிய குத்தகை வருவாயில் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. புல், புதர் நிறைந்த இடமாக மாறி போயிற்று. பக்தர்கள் யாரும் வராத நிலையில் பாம்புகள் போன்ற விஷஜந்துக்கள் நடமாட்டம் அங்கே நிறைந்துக்காணப்பட்டன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கட்டிடங்கள் இடிந்து போகும் நிலையானது. இந்நிலை வெகு காலமாக இருந்தது. மீண்டும் திருப்பணிகள் செய்து முடிக்க யாரும் முன்வராத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஆம்பலாப்பட்டில் இன்னிசை வீணை முழங்கவும், தோத்திரபாடல்கள் இசைக்கவும், ஆலயமணி அசைந்தாடி ஒலிஎழுப்பும் ஓசையை கேட்கவும் ஈசன் திருஉளவும் கொண்டனர்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பர் செயற்கரிய செய்தவர்கள் சித்தர்கள். அகங்காரம் என்ற பேயை அகழ்ந்து எரிந்தும் மனமென்னும் குரங்கை அடக்கியும் புத்தி தெளிந்த சித்தர்கள் மட்டுமே சிந்தையை ஊன்றி சிவத்தோடு கலந்து இருப்பார்கள். வாழ்ந்தபோது பசியினையும் சிற்றின்பங்களையும் மரணத்தையும் வென்று பெறு பெற்றவர்கள் சித்தர்கள். உலகியலில் எல்லாவற்றிலும் தாமரை இலை தண்ணீர்போலும், புளியம்பழம் ஓடு போலவும் இருந்து வந்தகாரணத்தை அறிந்துக்கொண்டு காரியம் கொண்டு செயல்பட்டார்கள். அன்னதானத்தின் பெருமையை உணர்ந்து அதற்காகவே இல்லறம் நடத்தி வாழ்ந்து வழிகாட்டினர். ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டி பாடல்களைப் பாடியவர்கள் தர்மம் தழைக்க தவம்புரிந்துக்கொண்டு வாழ்ந்தனர். பலரின் உண்மையான வேண்டுதல்களை செவிசாய்த்து அதை இறைவனிடம் தெரிவித்து நிறைவேற்றிவைப்பதும் சித்தரே. தன்னல மற்றவர்களாக இருந்து அரசு நடத்த அறிவுறுத்தினார்கள். பல மருத்துவர்களாலும் பார்த்து தீராத நோய்களையும் இனி கடவுள்தான் காப்பாற்றுவான் என்பதையும் தங்களது அரிய சித்தியால் நீக்கி அற்புதம் படைப்பார்கள்.
1999 முன்பு வரை மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த இன்றைய சித்தர் மகேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்குழாய் கிணறு தோன்டி விவசாயம் செய்ய எத்தனித்து பணியை தொடங்கி நடந்து கொண்டிருந்த வேலையில் பாண்டிய மன்னனால்1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பராமரிப்பு போதாமல் சிதிலமடைந்திருந்த இந்த சிவாலயத்தின் வழியில் வருவதும் போவதுமாக இருப்பார்.
அப்போது பின்னால் இருந்து கூப்பிடுவது போல இருக்கும் திரும்பி பார்த்தால் யாரும் தென்படமாட்டார்கள் “அப்படி ஒரு தினத்தில் வெய்யில் நேரத்தில் இளைப்பாறுவதற்காக கோவில் முன்பாக இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்த நிலையில் மரத்தை சுற்றி கிடந்த சருகுகளையும், முட்களையும் கூட்டி சுத்தம் செய்து எரித்து விட்டு அசதியில் கண்ணயர்ந்து தூங்கிய நிலையில் திடிரென்று விழிப்பு ஏற்பட்டு பார்த்த போது ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி அந்த நெருப்பின் மீது மூன்று முறை சத்தியம் செய்வது போலை தரையில் அடித்தது. அதை பார்த்து திகில் அடைந்த மகேந்திரன் குழம்பிய மநிலையில் இருந்தபோது ஒரு நாள் இறைவன் கனவில் தோன்றி நீ அமர்ந்த இடத்தில் கீழ் ஒரு கல் புதைந்து உள்ளது அதை தோண்டி எடு என்று யாரோ சொல்வதைப் போல இருந்தது. இது அடிக்கடி நடக்கவும் ஒரு நாள் பூமிக்கு கீழ் தோண்டி பார்த்த போது அங்கு கல் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் என்னை தோண்டி எடு என்ற குரல் கேட்ட வண்ணம் இருந்தது. இப்போது மகேந்திரன் ஏற்கனவே தோண்டிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி தோண்டி பார்த்தார். அப்போது நீளவடிவில் ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்து வெளியில் போட்டு அதில் அமர்ந்தும், படுத்தும் இருப்பார், அப்போது அவருள் ஒரு அபார சக்தி உட்புகுந்ததைப்போல் தோன்றும்”. ஒரு நாள் அவர் கல்லின்மீது அமர்ந்து இருந்தபோது இந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி கோபுரம் அமைத்து வழிபடு என்று கூறியது போன்று கேட்டது. உடனே “நானே ஒரு ஏழை! மன்னாதி மன்னனால் கட்டிய கோவிலை சாதாரண மகேந்திரன் கட்ட முடியுமா? வேடிக்கையாக இருக்கிறது” என கூறி சிரித்தார். அப்போது கோவில் கட்டுவதற்கு நான் உதவுகிறேன். நீ இந்த கல் மீது அமர்ந்துகொள். உன்னை தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு கூறு. அது பலிக்கும் அதன் மூலம் நீ நினைத்த செயலை செய்து முடிப்பாய் என அசரீரி உத்தரவிட்டது. அது முதல் விவசாயி மகேந்திரன் சித்தர் சிவராஜ மகேந்திர சுவாமிகள் ஆனார். தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு இறைவனின் அருளாசியுடன் குறை தீர்த்து வருகிறார். தீராத நோய், மகப்பேறின்மை, கடன் தொல்லை, கல்வியறிவு, வேலையின்மை, குடும்பத்தில் அமைதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளால் அல்லாடி வரும் பக்தர்கள் தனது அமைதியினை வழங்கும் ஆசிரமத்தில் அமர்ந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி அன்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார். அருள்வாக்கு பற்றி மகேந்திர சுவாமிகள் கூறும் போது ஒருவர் பிரச்சனைகளுடன் என்னை தேடி வரும்போது அதற்கு முன்னதாகவே அவர் யார் என்ன பிரச்சனைகளுடன் வருகிறார் அவருக்கு என்ன பரிகாரம் கூறுவது என்று இறைவன் கருணையால் தெரிந்துவிடும் அதன் அடிப்படையில் அருள் வாக்கு கூறி வருகின்றேன். மேலும் அவர் கூறும் போது இறைவன் எனக்கு கோவில் கட்டும்படி கட்டளையிட்டார். மன்னர்கள் கட்டிய கோவிலை சாதாரணமாக நான் எப்படி கட்ட முடியும். அதற்கான வசதி வாய்ப்பு எனக்கு கிடையாது என்று தயங்கினேன்.
அதற்கு பாரத்தை என்னிடம் ஒப்படைந்துவிட்டு வேலையை தொடங்கு என்று கட்டளை இட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு வேலையை தொடங்கினேன் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்ட தீர்மானித்தேன் அரசு அனுமதியின் பேரில் கட்டுமானப் பொருட்கள் பக்தி மணமும், தொண்டுள்ளமும் கொண்ட பெருந்தகைகளிடமிருந்து வந்து சேர்ந்தன.
பொருட்கள் வர தாமதமானால் இறைவனிடம் சென்று முறையிடுவேன். மறுநாள் தானாக அவை வந்து சேர்ந்துவிடும். இறைவன் கருணையாலும் கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் தற்போது 126 அடி உயரத்தில் 7 மாட நிலைகளுடன் 500 மேற்பட்ட சிற்பங்களுடன் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பஞ்சவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கட்டுமான பணி 2005 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு 54 அடி உயரத்தில் நுழைவு கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த மகாதேவியின் அதிசய கோபுரம் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும். “கோவிலில் 1.5கி. மீட்டர் தூரத்தில் வருணலிங்கம், இந்திரலிங்கம், குபேரலிங்களம் உள்ளிட்ட அஷ்டலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பவுர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்பட்டு வருகிறது”. மேலும் கோவிலின் குளத்தில் ரூ.6 கோடி செலவில் தண்ணீரும் கீழே சென்று தரிசிக்கும் வகையில் நவகிரக சன்னதிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
தல இருப்பிடம்
79.25. கிழக்கு தீர்க்கம், 10.5. வடக்கு அட்சம்
நெடிதுயர்ந்த தென்னை மரங்கள், வனப்புமிக்க வாழை, சிந்தைக்கு விருந்தளிக்கும் கானப் பறவைகளின் சங்கீத ஞானம், இவற்றுடன் நஞ்சையும், புஞ்சையும் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் ஆம்பலாபட்டு அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்காவில் பாப்பநாடு என்ற இடத்தில் இருந்து கிழக்கு திசையில் 4கி. மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் இருந்து ஆம்பலாப்பட்டுக்கு நகர பேருந்துகள் செல்கின்றது. சென்னையில் இருந்து வருபவர்கள் திருச்சி, தஞ்சை வந்து தஞ்சையில் இருந்து 30 கி.மீட்டர் தூரம் ரோடு வழியாக பயணித்தால் சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பநாடு வழியாக கோவிலை அடையலாம். மன்னார்குடியில் இருந்து 19கி. மீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. ரெயில் மூலம் வருபவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை வழியாக அங்கிருந்து பஸ், கார்களில் வரலாம். கோவிலில் பக்தர்கள் தங்கி செல்ல வசதி உண்டு. பட்டுக்கோட்டை, தஞ்சையில் விடுதி வசதிகள் உள்ளன.
மூர்த்திகள்
இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சிவன், பார்வதி, துர்கை, அஷ்டதுர்கா, ஞான சண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், நவக்கிரகங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இடும்பன், வீரபத்திரனுக்கு தனி சன்னதிகள் உள்ளது. கோவிலுக்கு வெளியில் தீர்த்தக் குளம் உள்ளது. இங்கு நீராடினால் நீராடுபவர்களின் உடல்பிணியையும், பிறவி பிணியையும் போக்குகின்றன.
தல விருட்சம் இலுப்பை மரம்
கோவில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொல்பொருள் இலாகா பாதுகாப்பிற்குட்பட்டது.
தினப்பூஜையும், திருவிழாக்களும்
இத்திருக்கோவிலில் தினந்தோறும் காலை 6.30 மணிக்கு மாலை 6.30 மணிக்கு வரை இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் தைப்பூசம் மாசி மகம் பங்குனி உத்திரம், சித்திராபவுர்ணமி, கைவகாசி விசாகம், ஆடி அமாவாசை, கார்த்தினை தீபம் தினங்களில் விஷேச பூஜைகள் நடைபெறும், சித்ரா பவுர்ணமியின் போது பக்தர்கள் காவடி எடுத்து வருவர். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்தை போன்று விஷேசமாக தீபம் ஏற்றி கொண்டாடப்படும். தைப் பூசத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.
தங்கம் அருளும் சொர்ணபைரவர்
இக்கோவிலில் உள்ள சொர்ணபைரவர் ஆற்றல் மிக்கவர் இவரை வணங்கி வழிபட்டு பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் இவர் தங்கம் அருள்வதாக ஐதிகம். பணப்பிரச்சனை, அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளும் நீங்கும்.
மழலைச்செல்வம் பெற மண்சோறு சாப்பிடும் பக்தர்கள்
இக்கோவிலில் நீண்ட காலம் குழந்தை இல்லாத தம்பதியர்கள் கோவிலுக்கு வந்து தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்கள் கருப்பையில் கருத்தரித்து பத்துமாதங்களில் அவர்கள் இல்லங்களில் குழந்தை செல்வம் தவழும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து மண்சோறு சாப்பிட்டுச் செல்கின்றனர்.
கோவிலின் அமைப்பு
வான் பொய்பினும் தான் பொய்யா வற்றாத ஜீவநதியாம் காவிரி வடகாடு சங்கம கிளையின் தென்கரையோரம் கோவில் அமைந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடனே வானை தொட்டுவிடும் விதத்தில் பிரம்மாண்டமாக 126 அடி உயரத்தில் 7 நிலை மாடங்களுடன் 500 க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுரம் நமது கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. உள்ளே அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளன. கொடிமரம் முன்பு வீற்றிருக்கும் நந்தீஸ்வரரிடம் அனுமதி பெற்று சிவ தரிசனம் செய்ய செல்ல வேண்டும். கருவறையில் மூல லிங்கமாகிய அருள்மிகு அண்ணாமலையார் எழுந்தருளியுள்ளார். வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். அருள்மிகு அண்ணாமலையார் லிங்க வடிவில் சதுரபீடத்தில் சுயம்புலிங்கமாக விளங்குகிறார். இவரது சன்னதியின் வடபுறத்தில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம். இந்த உல கநன்மைக்காக பக்தர்களை காத்து அருள்புரிய அவனியில் பூத்தவள். பூத்தவண்ணம் காத்து அருளாசி புரிந்து வருகிறாள். கோபுரவாசலில் சிம்ம பலிபீடம் உள்ளது. அம்பிகை கோயிலின் எதிரில் 54 அடி உயரத்தில் கோபுரம் அழகுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மகாதேவ்சன்னதி அம்மன் சன்னதி சந்திப்பில் மேற்கூரையில் பாண்டிய மன்னனின் சின்னமான மீன் வேப்பம்பூ சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் கோயிலுக்கும் பாண்டிய மன்னருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவருகிறது.
வழிபாட்டில் உள்ள சந்நதிகள்:
கோவிலில் பிரகாரத்தை வலம் வரும் போது விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத முருகன், துர்க்கை, சொர்ணபைரவர், நவகிரகங்கள், சன்னதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இருக்கும் வரை மகா மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.