செவ்வாய், 27 செப்டம்பர், 2022

குருவும் சீடனும்



குருவும் சீடனும்
 
தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர் சாஸ்திரங்களின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். இறையனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற, தூய்மையான வாழ்க்கையுடன், சீடனிடம் அளவற்ற கருணையை கொண்டிருக்க வேண்டும். பணிவு, முக்தியில் தீராத ஆர்வம், புலனடக்கம், சாஸ்திரங்கள் மற்றும் குருவிடம் நம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவை சீடனுக்கு உரிய குணங்களாக இருக்க வேண்டும்.

 மந்திர தீட்சை

 தியானிப்பின் போது உச்சரிக்க மந்திரம் என்ற ஒன்று வேண்டும். மந்திரம் என்பது அதனை ஜெபம் செய்பவரை பாதுகாக்க வல்ல இறைவனின் திருநாமம். தீட்சை என்பது குரு சீடனுக்கு இந்த மந்திரத்தை அளிக்கும் முறை. இதன் மூலம் சீடனின் பாவங்கள் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. மந்திர தீட்சை  சீடனின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அவனை தியானம் செய்வதற்கு தகுதி உடையவனாக்குகிறது. தியானத்தின் முழு ஆழத்தையும் காண இறங்குபவர்கள் ஒரு குருவிடமிருந்து தீட்சை பெறும் இந்த புனிதச் சடங்கை மேற்கொள்ள வேண்டும்.

மந்திரத்தின் பகுதி.

பொதுவாக மந்திரம் என்பது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். அவை பிரணவம் என்ற ஓம், இஷ்ட தெய்வத்தை குறிக்கும் பீஜம், இஷ்ட தெய்வத்தின் பெயர், வந்தனத்தை தெரிவிக்கும் 'நம' ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சொல் தான் மந்திரம்.

 தியானம் செய்யும் முறை.

 1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
 
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.
 
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவே, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
 4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
 
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
 
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
 
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
 
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
 
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
 
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
 
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.

கருத்துகள் இல்லை:

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...